கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் களமானது பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளின் மோடி, அமித் ஷா, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரின் பிரசாரங்களால் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன்புகூட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கார்கே, மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இது பா.ஜ.க வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பவே, “நான் மோடியைக் குறிப்பிடவில்லை. பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை விஷப் பாம்பு என்றேன்” எனக் கூறிய கார்கே, இது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணமே இருந்தன. பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர்கூட “சோனியா காந்தி விஷப் பெண்மணியா?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தன்னை விஷப் பாம்பு எனக் கூறுவதாகவும், கர்நாடக மக்கள் அதற்குப் பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் ஒரு காலாவதியாகிவிட்ட இன்ஜின். காங்கிரஸிடம் போலி வாக்குறுதிகள் இருக்கின்றன. பொதுமக்களுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே காங்கிரஸின் ரெகார்ட் (Record). ஆனால் பா.ஜ.க பல வளர்ச்சிப் பணிகளைச் செய்து அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறது. மேலும், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கென்று அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஏழைகளை எப்போதும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
ஆனால் பா.ஜ.க, விவசாயிகளுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் சிலரைத் திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் செய்கிறது. பா.ஜ.க அப்படியல்ல. அதோடு காங்கிரஸ் எப்போதுமே ஊழலில்தான் வளர்ந்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக பா.ஜ.க-வால் மட்டுமே உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு ஊழலுக்கு எதிராக நான் போராடுவதால்தான் காங்கிரஸ் என்னை வெறுக்கிறது. என்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்கின்றனர். இந்தத் தேர்தலுக்காக விஷப் பாம்பு என்ற தலைப்பில் காங்கிரஸ் என்னை பாம்புடன் ஒப்பிடுகிறது. அவர்களுக்கு மே 10-ம் தேதி கர்நாடக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்றார்.