ஏவிஎம் சரவணன் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழ் சினிமாவின் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்தை ஏவி மெய்யப்ப செட்டியார் துவங்கி திறம்பட நடத்தி தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றார். இவருக்கு அடுத்து இவரின் மகன் ஏவிஎம் சரவணன்(83) அந்த பொறுப்பை ஏற்று ஏராளமான படங்களை தயாரித்தார். கடந்த பல ஆண்டுகளாக தயாரிப்பை விட்டு இந்நிறுவனம் ஒதுங்கி உள்ளது. இருப்பினும் இந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறையினர் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட எண்ணி உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் முழுக்க முழுக்க ஓய்வெடுத்து வரும் ஏவிஎம் சரணவனை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த போட்டோவில் சரவணன் கையில் பேண்ட் கட்டப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கையில் அடிபட்டு இருக்கலாம் என தெரிகிறது. அதற்காக அவரை சந்தித்து முதல்வர் நலம் விசாரித்து இருக்கலாம். இந்த சந்திப்பின்போது சரவணன் குடும்பத்தினர் உடன் இருந்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
நன்றி சொன்ன பேத்தி
‛‛அன்புடன் எங்கள் இல்லம் வந்து தாத்தாவின் உடல் நலம் விசாரித்ததற்கு மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் சார்பிலும், என் குடும்பத்தினர் சார்பிலும் மிக்க மகிழ்ச்சியுடன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் தெரிவித்துள்ளார்.