ஏ.என்.ஐ-க்கு வந்த திடீர் சிக்கல்… அப்ப AI தான் காரணமா… எப்படி மீண்டு வந்தது?

ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனத்தை அறியாத செய்தி ஆர்வலர்கள் இந்தியாவில் இருக்கவே முடியாது. வீடியோ செய்தி சேவையை அறிமுகம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. 1971ல் தொடங்கி இன்று வரை தலைசிறந்த செய்தி நிறுவனமாக ஏ.என்.ஐ விளங்கி வருகிறது. இது பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் எனப் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ளது.

ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கு

இந்நிலையில் ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக நேற்றைய தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ”Your account @ANI has been locked” என்ற ஸ்கிரீன் ஷாட் பெரிதும் வைரலானது. இதை ஒருதரப்பினர் கொண்டாடினர். ஏனெனில் ஏ.என்.ஐ நிறுவனம் ஒரு குறிப்பிட்ட கொள்கையுடன் இயங்கி வருகிறது. இனி எங்களுக்கு ஏ.என்.ஐ தேவையில்லை என்றெல்லாம் பதிவிடத் தொடங்கினர்.

என்ன காரணம்?

இந்நிலையில் எதற்காக முடக்கப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதுபற்றி ஆராய்கையில், ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கை 13 வயதுக்கு கீழே உள்ள நபர் தொடங்கியதாக கூறி முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் பதிலளித்திருந்தனர். ஒருவேளை தவறுதலாக முடக்கப்பட்டது என்று கருதினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என விவரத்தையும் பதிவிட்டிருந்தனர்.

மாற்று ஏற்பாடு

இதற்கிடையில் ஏ.என்.ஐ கணக்கு மீண்டு வரும் வரை, ஏ.என்.ஐ டிஜிட்டல் (@ani_digital) மற்றும் ஏ.என்.ஐ இந்தி நியூஸ் (@AHindinews) ஆகிய பக்கங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்படும். பயனாளர்கள் அங்கு சென்று உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. 2011 ஆகஸ்ட் மாதம் முதல் ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது.

சிக்கலை ஏற்படுத்திய ஏ.ஐ

ஊடக உலகின் தலைசிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த செய்தி ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்களால் ஏ.என்.ஐ நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் 13 வயதுக்கு கீழே உள்ள ஒருவர் ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கை தொடங்கியிருக்க முடியுமா? எங்கேயோ தவறு நடந்திருக்கிறது எனக் கூறத் தொடங்கினர். இதுபற்றி தொழில்நுட்ப வல்லுநர்களிடம் விசாரித்தால், ட்விட்டரில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு வசதிகளை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலாம் மாஸ்க் அறிமுகம் செய்திருந்தார்.

ட்விட்டர் அதிகாரிகள் அதிரடி

பல்வேறு துறைகளில் ஏ.ஐ ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் ட்விட்டர் தளத்திலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஏ.ஐ பயன்பாட்டில் தான் எங்கேயோ தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் ஆட்டோமேட்டிக் முறையில் ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம். இதுபற்றி அந்நிறுவனத்திடம் தகவல் தெரிவித்ததும் கணக்கின் பின்னணி விவரங்களை ஆராய்ந்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஏ.ஐ சில சமயங்களில் நமக்கு எதிராக கூட திரும்பலாம். அதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம் என்று கூறியுள்ளனர். அதேசமயம் ட்விட்டர் நிறுவனத்தின் தரப்பில் இருந்து 13 வயது என்ற விஷயத்தை தவிர, வேறு எந்த காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.