கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் கர்நாடகத்தில் கழிவுகள் கலக்கப்படுவதையும், அதனால் தென்பெண்ணை ஆற்று நீர் நுரைத்துக் கொண்டு வருவதையும் கடந்த 15-ஆம் தேதி சுட்டிக்காட்டியிருந்த பா.ம.க., அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.

காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கர்நாடகம் கழிவுநீரை கலப்பது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த அத்துமீறலை தமிழகம் வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற வேண்டும். காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. கிடப்பில் உள்ள அந்த வழக்கை விரைவுபடுத்தவும், 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு கலந்த கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.