கொடுமை.. கூரையை பிச்சிகிட்டு ஊத்தும் மழை நீர்… பக்கத்து மாநிலத்தில் பார்த்தா என்ன நினைப்பாங்க?

தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு பயணிகளின் பொதுப் பேருந்து சேவையை பூர்த்தி செய்வதற்காக 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 1000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் அரசாணை வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வெளியிட்ட இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்டத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்றும் ஓட்டை உடைச்சல் பேருந்துகள் இன்னமும் இயங்கி வருவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர். அந்த வேதனையின் உச்சமாக மழை காலங்களில் பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்து பயணிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.

நெல்லை – நாகர்கோவில் செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து மிக மோசமாக பழுதடைந்துள்ளதால் மழை நீர் அப்படியே பேருந்துக்குள் கொட்டிக்கொண்டிருக்க, பயணிகள் குடை பிடித்துக்கொண்டு பயணிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திலும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் ஒரு அரசு பேருந்தின் இப்படியான நிலை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ…தள்ளு தள்ளு தள்ளு..! Start ஆகாமல் அடம் பிடித்த பேருந்து!

நீண்ட வருடங்கள் ஓடிய பேருந்தை சீரமைக்காமலும், அதன் தரத்தை ஆராயாமல் தொடர்ந்து இயக்க செய்த அதிகாரிகளின் அலட்சியத்தாலும் வரி கட்டும் மக்கள் பேருந்துக்குள்ளேயும் மழை நீரில் நினைந்தபடி பயணித்து செல்வது சோகத்தின் உச்சம். பல கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தில் மெரினாவில் பேனா சிலை அமைக்க முனைப்பு காட்டி வரும் அரசு சாமானியர்கள் பயணிக்கும் அரசு பேருந்தையாவது சிரமமின்றி மக்கள் பயணிக்க மாற்றி தரக்கூடாதா என்ற நியாயமான கேள்வியை நெல்லை மக்கள் எழுப்புகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்களுக்கு தேவையான நல திட்டங்களை அரசு செய்து கொடுப்பதாக பெருமைபட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்கள், இதே தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒண்ணுத்தும் உதவாத பேருந்தில் மக்கள் இன்னும் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறாற்கள் என்பதை உணர்வார்களா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.