சந்திரபாபு நாயுடு குறித்த ரஜினி பேச்சு- அமைச்சர் ரோஜா எதிர்ப்பு!
என்.டி ராமராவின் நூறாவது பிறந்தநாள் விழா விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது, ‛‛சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலை நோக்கு பார்வை காரணமாகத்தான் ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது'' என்று அவரை பாராட்டி பேசினார்.
இதற்கு ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான நடிகை ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ரஜினியின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. 2003ம் ஆண்டுடன் தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது. அதையடுத்து இப்போது 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது ஹைதராபாத் நகரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 20 ஆண்டுகாலம் ஹைதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். மேலும் என்.டி.ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும். தன்னுடைய இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி என்.டி.ராமராவ் என்னுடைய மருமகன் ஒரு திருடன் என்று கூறினார். அவனை யாரும் நம்பாதீர்கள் என்று கூறினார். இது ரஜினி அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் என்.டி.ராமராவ் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அதை கேட்டுவிட்டு சந்திரபாபு நாயுடு எப்படிப்பட்டவர் என்பதை ரஜினிகாந்த் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.