சிவகங்கை : மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் பலி – 31 பேர் படுகாயம்.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் ஏழைகாத்த அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்ததையொட்டி அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்பதற்காகவும், அதனை பார்ப்பதற்காகவும் சுமார் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வெளிவந்த மாடு ஒன்று இளைஞர்களின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக பார்வையாளர் கூட்டத்தில் புகுந்தது.
இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் தலை தெறிக்க ஓடினர். இருப்பினும் பார்வையாளர்களை புரட்டி எடுத்துள்ளது. அதில் 31 பேர் காயமடைந்தனர். உடனே விழா கமிட்டி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு அனைவரையும் பரிசோதனை செய்ததில் கச்சாபட்டியைச் சேர்ந்த மோகனம் என்பவர் மட்டும் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவர்களில் ஐந்து பேரை மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.