புதுடெல்லி: கடந்த 2019 ஆகஸ்ட் 23 முதல் அதே ஆண்டு அக்டோபர் 30 வரை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார். அப்போது, ஊழியர்கள் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெறவும் கிரு நீர் மின்சக்தி திட்டத்துக்கான கட்டுமான பணி ஒப்பந்தத்தைப் பெறவும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்து சத்யபால் மாலிக்கிடம் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி விசாரணை நடத்தியது. இந்நிலையில், டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள சத்யபால் மாலிக் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சென்றது.
அப்போது, அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடந்த விசாரணையின்போது மாலிக் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மேலும் சில விளக்கங்களை அவரிடம் கேட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.