தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை | தமிழக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்

மதுரை: தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க முதல்வர் பரிசீலிக்கவேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”தொழிலாளர் நலனுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தொழிற்சங்க தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். இதை பாராட்டுகிறோம். மத்திய அரசு தொழிலாளர் நலன் குறித்த 44 சட்டங்களை நான்காக தொகுத்துள்ளது. இதில் தொழிலாளர்களுக்கு எதிரான பகுதிகளை நீக்க வலியுறுத்தி முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடையே விசிக சார்பில், நாளை வாக்கு சேகரிக்க உள்ளேன். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பாஜக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் குறிவைத்து மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை விதைக்கிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவது தென் மாநிலங்களின் நலனுக்கு இன்றியமையாத தேவை.

கர்நாடகாவில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாதியில் நிறுத்தியது குறித்து, அண்ணாமலை பதில் சொல்லவேண்டும். அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என, ஈஸ்வரப்பா இடைமறித்து நிறுத்தியுள்ளார். கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில், தமிழ் வாக்காளர்களை அவமதிக்கும் வகையில் அவர் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபான வகைகளை பெற முடியும் என்ற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமுமில்லை. தமிழக முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும். படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் திமுக. இதை தேர்தல் வாக்குறுதியிலேயே அக்கட்சி உறுதிப்படுத்தி இருக்கிறது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் முன்வரவேண்டும்.

பிரதமர் மோடியின் நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியை யொட்டி கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒளிபரப்பப்பட்டது. இது அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று. தமிழ் மீதான உண்மையான பற்று என்று சொல்ல முடியாது. திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பேசுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் அவர்கள் கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று.

இந்தியை திணிக்கவேண்டும், சமஸ்கிருதத்தை மேம்படுத்தவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். தூத்துக்குடி விஏஓ படுகொலை வேதனை அளிக்கும் சம்பவம். மணல் மாஃபியா கும்பல், விஏஓ-வை கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்திருக்கிறது. இதை கண்டிக்கிறோம். மணல் மாஃபியா கும்பல்களை கட்டுப்படுத்த அரசு சிறப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும்.” இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.