திருப்பதி உண்டியலில் கைவைத்த தில்லாலங்கடி… ஆடைக்குள் அமெரிக்க டாலர்கள்… சிக்கியது எப்படி?

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் சென்ற வண்ணம் உள்ளனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள சூழலில் மக்கள் வெள்ளத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. கூட்டம் ஒருபுறம், மொட்டை அடிக்க தள்ளுமுள்ளு மறுபுறம், உண்டியலில் கொட்டும் காணிக்கைகள் இன்னொரு புறம் என திருமலையில் திருவிழா கோலம் தான்.

திருப்பதி உண்டியல் காணிக்கை

இந்நிலையில் திருப்பதியில் நடந்த ஒரு விஷயம் தேவஸ்தானத்தை மட்டுமின்றி, பக்தர்களையும் ஆட்டம் காண வைத்துள்ளது. திருமலையில் உள்ள பரகாமனி மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 உண்டியல்கள் ஸ்ரீவாரி கோயிலில் இருந்து பரகாமனி பவனிற்கு எண்ணுவதற்காக கொண்டு வந்துள்ளனர். அதில் இந்திய ரூபாய், வெளிநாட்டு ரூபாய், நகைகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.

பலத்த பாதுகாப்பு

இதையொட்டி விரிவான போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு என பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில் ஒப்பந்த ஊழியர் ரவிக்குமார் காணிக்கைகளை எண்ணும் போது வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து தனது ஆடைக்குள் போட்டுக் கொண்டார்.

அமெரிக்க டாலர்கள் திருட்டு

சிறிது நேரம் காணிக்கைகளை தொடர்ந்து எண்ணி வந்துள்ளார். அதன்பிறகு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எழுந்து சென்றிருக்கிறார். இதை சிசிடிவி மூலம் போலீசார் கண்டறிந்தனர். உடனே அவரை பிடித்து விசாரித்தனர். அவரது ஆடைகளை சோதனை செய்த போது, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.

பக்தர்கள் அதிர்ச்சி

இதையடுத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஏழுமலையான் பக்தர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் திருமலை ஸ்ரீவாரி கோயிலுக்கு அருகில் புதிதாக பரகாமனி பவன் கட்டிடம் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

பரகாமனி பவன்

அங்கு நவீன கண்காணிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது பெங்களூருவை சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற நபர் அளித்த 23 கோடி ரூபாய் நன்கொடை மூலம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த பவனில் தான் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு நான்கு புறமும் கண்ணாடி பொருத்தப்பட்டு பக்தர்கள் வெளியில் இருந்து காணிக்கை எண்ணும் பணிகளை பார்க்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஊழியர் ஒருவர் கைவரிசை காட்ட முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.