தமிழகத்தில் கொலை கொள்ளை திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகவும், திறமையில்லாத முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர். கட்சியின் உயர் பொறுப்புக்கு செல்ல முடியும். தமிழகத்தில் கஞ்சா எளிதாக கிடைப்பதால் கொலைகள் அரங்கேறி வருகின்றன.
ஒரு திறமை இல்லாத முதலமைச்சர், மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் என்பது வெட்கடான விஷயம். இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மக்களுக்கு என்ன தேவை, மக்கள் என்ன நினைக்கிறார்கள், இதை செய்தால் மக்கள் எப்படி நன்மை பெறுவார்கள் என்ற சிந்தனையே இல்லாத ஒரு முதலமைச்சர் தான் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். எந்த துறையை எடுத்தாலும் ஊழல் லஞ்சம் லாவண்யம் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை, இந்த திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. முதியோர்களுக்கும் எதிரான ஒரு ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.