ட்ரெய்லரின் மூலம் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இப்படம் வரும் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்குமாறு கேரள மாநில காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இப்படம் பொய்களால் நிரம்பியுள்ளது. 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படம் சொல்கிறது. படத்தில் என்ன இருக்கப் போகிறது என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. கேரள மாநிலத்தின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.