பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் இருந்து நிலை தடுமாறி கீழே சரிந்தார்.
கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா நேற்று பிற்பகல் விஜயநகருக்கு பிரச்சாரத்துக்கு சென்றார்.
அப்போது காரின் ஓரத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு கையசைத்தவாறு சென்றார். பின்பு காரில் அமர முற்பட்ட போது சித்தராமையா நிலைதடுமாறி கீழே சரிந்தார். அப்போது அவரது உதவியாளர்கள் உடனடியாக தாங்கி பிடித்தனர்.
பின்னர் அவருக்கு கொஞ்சம் குளுக்கோஸ் கொடுத்தனர். பின்னர் அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், ‘‘நான் நன்றாக இருக்கிறேன். தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை. ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்றார். சித்தராமையா, காரிலிருந்து கீழே சரிந்ததால் அப்பகுதியில் தொண்டர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.