ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணி இரு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியுடன் விளையாடியது. ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் துருவ் ஜுரேல் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் தோனி அவரை ரன் அவுட் ஆக்கினார். தோனி தன்னை ரன் அவுட் ஆக்கியது குறித்து துருவ் ஜுரேல் ஒரு பேட்டியில் கூறும்போது;
“நான் சிறு வயதில் இருந்தபோதே அவரின் விளையாட்டை ரசித்திருக்கிறேன். தற்போது ஒரே மைதானத்தில் நான் அவருடன் விளையாடிக்கொண்டிருப்பதும், அவர் எனது பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருப்பதும் எனக்கு பெரிய விஷயமாக இருந்தது.
போட்டியில் தோனி என்னை ரன் அவுட் செய்தார் என்பதை நான் பெருமையாக எடுத்துக்கொள்வேன். 20 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியின் ஸ்கோர் கார்டை பார்க்கும்போது தோனி என்னை ரன் அவுட் செய்தார் என இருக்கும். அதுவே எனக்கு போதுமானது.”
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.