புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நாகநதிக்கு புத்துயிர் அளித்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
கடந்த 2014 மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதே ஆண்டு அக்.3-ம் தேதி முதல்முறையாக ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. அது முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு வானொலியில் ஒலிபரப்பானது. நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் கேட்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபையின் தலைமை அலுவலகம், தூதரக அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல், அவர்களது உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்த நிகழ்ச்சி. கடந்த 2014 அக்.3-ம்தேதி விஜயதசமி நாளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் பயணம் தொடங்கியது. இதன் ஒவ்வொரு பகுதியும் சிறப்பானது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இதில் பங்கேற்றபோது, உலகம் முழுவதும் பேசுபொருளானது.
‘‘நாம் எப்போதும் மற்றவர்களின் குணநலன்களை பாராட்ட வேண்டும். எதிரில் இருப்பவர் நண்பரோ, எதிரியோ, யாராக இருந்தாலும், அவரது நல்ல குணங்களை அறிந்து, அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றுஎனது வழிகாட்டியான லஷ்மண்ராவ் இனாம்தார் அறிவுரை கூறுவார்.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மக்களை சந்திப்பது, அவர்களோடு பழகுவது இயல்பாக இருந்தது. 2014-ல்டெல்லிக்கு வந்த பிறகு, பணி,பொறுப்பு, சூழ்நிலை, பாதுகாப்புஎன அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. அந்த சூழலில், சாமானிய மக்களோடு என்னை இணைக்கும் பாதையை காட்டியது மனதின் குரல் நிகழ்ச்சி. கோடிக்கணக்கான இந்திய மக்களுடனான எனது உறவு, உணர்வு, பிரிக்க முடியாதது. என்னை பொருத்தவரை இது ஒரு நிகழ்ச்சி அல்ல. இது என் நம்பிக்கை, வழிபாடு, விரதம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆற்றி வரும் அளப்பரிய சேவைகள் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. மனதின் குரலில் யாரைப் பற்றி குறிப்பிடுகிறோமோ, அவர்களே நம் கதாநாயகர்கள். அவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உயிரோட்டம். அதேபோல, 100-வது நிகழ்ச்சியில் அவர்களில் சிலர் என்னோடு இணைந்துள்ளனர். அந்த வகையில், என் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், ‘மகளோடு செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதை மிகப்பெரிய இயக்கமாக நடத்தலாம்’ என்று ஆலோசனை கூறிய ஹரியாணாவை சேர்ந்த சுனில் ஜக்லான்.
தமிழக பழங்குடியின பெண்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்கின்றனர். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நாகநதிக்கு புத்துயிர் அளித்துள்ளனர். இப்படி எத்தனையோ இயக்கங்களை நமது பெண்கள் தலைமையேற்று நடத்திக் காட்டியுள்ளனர்.
நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த நதிகள், மலைகள், குளங்கள், புனித தலங்களை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு முன்பு, முதலில் நம் நாட்டில்குறைந்தபட்சம் 15 சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும்.
மனதின் குரலில் எப்போதும் நல்லிணக்கம், சேவை உணர்வு,கடமை உணர்ச்சி ஆகியவையேமுன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் அமுத காலத்தில், இந்த நேர்மறை எண்ணமே நம் தேசத்தை முன்னெடுத்துச் செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.