நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் காலை, மதியம் என இரு பிரிவுகளாக வகுப்புகள் நடைபெற்ற வருகின்றன. இந்தக் கல்லூரியில் நாமக்கல் மட்டுமின்றி, அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக சுந்தரமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார். கல்லூரியில் பயிலும் மாணவிககளுக்குப் பேராசிரியர் சுந்தரமூர்த்தி பாலியல்ரீதியாகத் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. முதலாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவர், அந்தப் பேராசிரியர் தன்னிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசியதாக, ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த மாணவி கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், பேராசிரியர் சுந்தரமூர்த்திமீது போக்சோ வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இதற்கிடையில், ‘பாலியல் தொல்லைக் கொடுக்கும் நோக்கத்தில் மாணவிகளிடம் நான் நடந்து கொள்ளவில்லை’ என தன்மீதான குற்றச்சாட்டை சுந்தரமூர்த்தி மறுத்து பேசினார். ஆனால், அதன் பிறகு அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், தலைமறைவாக இருக்கும் பேராசிரியர் சுந்தரமூர்த்தியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மாணவிகளுக்குப் பாலியல்ரீதியாகத் தொல்லைக் கொடுத்து, அரசுக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் போக்சோ வழக்கில் சிக்கியிருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.