ராஞ்சி: ஜார்கண்ட்டில் கணவருடன் சென்ற இளம்பெண்ணை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று 7 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கும்பலிடம் இருந்து போராடி ஆடை எதுவுமின்றி அந்த இளம்பெண் தப்பித்து ஓடிவந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கூட ஆங்காங்கே தினமும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றசம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன.
இந்நிலையில் தான் தற்போது ஜார்கண்ட்டில் கணவருடன் சென்ற 20 வயது இளம்பெண்ணை 7 பேர் கும்பல் தாக்கி கடத்தி பலாத்காரம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
ஜார்கண்ட் மாநிலம் போரியா மாவட்டம் ஜெட்கி கும்ரார் ஜோரி கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். திருமணமான இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இளம்பெண் தனது கணவருடன் சேர்ந்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்களை 7 பேர் கும்பல் திடீரென வழிமறித்து மிரட்டியது.
மேலும் அந்த கும்பல் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கணவர் அந்த கும்பலை எதிர்த்தார். இதனால் கோபமடைந்த கும்பல், அவர்கள் 2 பேரையும் தாக்கியது. மேலும் பெண்ணை அருகே உள்ள புதருக்குள் இழுத்து சென்றது. பின்தொடர்ந்து கும்பலிடம் சண்டையிட்ட பெண்ணின் கணவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியது.
7 பேர் கும்பல் என்பதால் அவரால் ஒற்றை ஆளாக அவர்களை எதிர்க்க முடியவில்லை. இதனால் அவர் அருகே உள்ள கிராமத்துக்கு உதவிக்கேட்டு கூச்சலிட்டபடி ஓடினார். கிராமத்தினரை அழைத்து வர கணவர் சென்ற நிலையில் அவரது மனைவி அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பித்தார். உடலில் ஆடையின்றி அந்த பெண் தனது கிராமத்துக்கு ஓடிவந்தார்.
அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கணவரிடம் கண்ணீர் மல்க கூறினார். அந்த கும்பல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக போரியோ ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக சாஹிப்கஞ்ச் சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் சம்பவம் குறித்து போரியோ போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஜார்கண்ட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.