சென்னை: பள்ளிகளுக்கு நீண்டநாட்களாக வராமல் இருக்கும் மாணவர்களின் லிஸ்ட்டை தயாரிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அண்மையில்தான் நடந்து முடிந்தன. அதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், பள்ளிக்கல்வித் துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
நடந்து முடிந்த 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், மொழிப்பாட தேர்வுக்கு 50 ஆயிரம் மாணவர்கள் வராமல் ஆப்சென்ட் ஆகினர். இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்தது. எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தை கையில் எடுத்து அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தன.
இது, பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏன் இத்தனை மாணவர்கள் அன்றைக்கு தேர்வு எழுத வரவில்லை என விசாரணை நடைபெற்றது. இதில், ஆப்சென்ட் ஆன பெரும்பாலான மாணவர்கள் நீண்டநாட்களாக பள்ளிக்கு வருவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இது, பள்ளிக்கல்வித் துறைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது.
எதற்காக இந்த மாணவர்கள் நீண்டநாட்களாக பள்ளிக்கு வரவில்லை; இதுகுறித்து அந்தந்தப் பள்ளி நிர்வாகங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்தது; மாணவர்கள் பள்ளிக்கு வராததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நீண்டநாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களின் பட்டியலை தயாரித்து, வரும் 2-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் இடம்பெற்ற மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், வரும் கல்வியாண்டில் இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீண்டநாட்களாக பள்ளிக்கு வராமலும், அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து தெரியப்படுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து இந்தப் போக்கு தொடர்ந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா ஊரடங்குக்கு பிறகு பள்ளி மாணவர்களின் போக்கில் பல வித்தியாசங்களை காண முடிகிறது. ஆன்லைனில் நீண்டகாலமாக வகுப்புகள் நடைபெற்றதாலும், ஆசிரியர்களின் நேரடி கண்டிப்பு இல்லாததாலும் பல மாணவர்கள் ஒழுங்கீனமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது, பள்ளிகளுக்கு சரியாக வராமல் இருப்பது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பல ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.