சென்னை:
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நிலையில், ஜில்லென ஐஸ்கிரீமை சாப்பிட்டது போல சூப்பர் அப்டேட்டை சொல்லி இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்னும் 3 தினங்களுக்கு மழை சிறப்பான சம்பவத்தை செய்யப் போகிறது என்ற அப்டேட் தான் அது. எங்கெல்லாம் மழை இருக்கும்.. எங்கெல்லாம் கனமழை கொட்டும்.. வாங்க பார்க்கலாம்.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை வெளுத்து வாங்கப் போகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சூறைக்காற்றுடன் கூட மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுகள், தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல, நாளை (மே 1) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (மே 2), தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அன்றைய தினம் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அநேக இடங்களில் மழை பெய்யும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.