லூதியானா: பஞ்சாபின் லூதியானா நகரில் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியான வாயு தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லூதியானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள். இதில், 10 மற்றும் 13 வயதுள்ள இரண்டு சிறுவர்களும் அடக்கம். 4 பேர் சுய நினைவு இன்றி காணப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். அதோடு, மேலும் 4 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து தீ அணைப்புப் படையினர், காவல்துறையினர், 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி என்பதால், வாயுக் கசிவை அடுத்து அங்கிருந்து மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகவும், வாயுக் கசிவுக்காண காரணம் தெரியவில்லை என்றும், எத்தகைய வாயு வெளியேறியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் லூதியானா காவல் ஆணையர் மன்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சாத்தியமான அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.