புதுடெல்லி: பதக்கத்தை விட இங்கே நீதியை வெல்வதுதான் பெரிது என இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இந்த கருத்தை பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
“நாங்களும் எங்கள் இயல்புக்கு திரும்ப வருகிறோம். எங்களுக்கு விளையாடுவதும், அது சார்ந்து பயிற்சி எடுப்பதும் மிகவும் அவசியம். அதை நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு நீதி கிடைத்தால் அது ஆசிய விளையாட்டில் வெல்லும் பதக்கத்தை விடவும் பெரிது” என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். மே மாதம் ஆசிய விளையாட்டுக்கான ட்ரையல் நடைபெற உள்ளது.
“பிரிஜ் பூஷன் சரண் சிங் எங்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச எண்ணுகிறார். இதனை வேறு திசையில் எடுத்து செல்ல நினைக்கிறார். உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட பின்னரே அவர் இப்படி பேசி வருகிறார். சமூக வலைதளத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் ஆக்டிவாக இயங்கி வருகிறார். ஆனால், நீதி நீதிமன்றத்தில் தான் கிடைக்குமே தவிர இணையதளத்தில் அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
“நிகத் ஜரீன் மற்றும் சானியா மிர்சா ஆகியோர் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவும் ஹரியாணாவை சேர்ந்தவர் அல்ல. நாங்கள் அரசியல் ரீதியாக இயங்குகிறோம் என பிரிஜ் பூஷன் சொல்லியுள்ளார். நாட்டில் எத்தனை எம்.பி அல்லது எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது” என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்தது: “நான் முற்றிலும் நிரபராதி. உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். எந்த வகையான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நான் பதவி விலகுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டது போலாகி விடும்.
இந்த சர்ச்சையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில்ஒரு தொழிலதிபருக்கும், காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாக நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அவர்கள் என் மீது அதிருப்தியில் உள்ளனர். எனக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் வீராங்கனைகள் இன்னும் தர்ணாவில் அமர்ந்துள்ளனர். அவர்கள் ஏன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுகிறார்கள்?
விசாரணை அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்காமல், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, புதிய குற்றச்சாட்டை முன்வைத்து, மல்யுத்த விளையாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
12 ஆண்டுகளாக வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அவர்கள் ஏன் காவல் நிலையத்திலோ, மல்யுத்த கூட்டமைப்பிலோ அல்லது அரசாங்கத்திலோ புகார் கொடுக்கவில்லை. அவர்கள் நேராக ஜந்தர் மந்தருக்குச் சென்றுள்ளனர். விசாரணைக் குழுவிடம் ஒரு ஆடியோ பதிவை சமர்ப்பித்துள்ளேன். அதில், ஒரு நபர் என்னை சிக்க வைக்க ஒரு பெண்ணை ஏற்பாடு செய்வது பற்றி பேசுவது இடம் பெற்றுள்ளது” என சொல்லியுள்ளார்.