லக்னோ:புராதன கோட்டைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திருமணங்கள் நடத்துவதை ஊக்குவிக்கும் வகையில், திருமண சுற்றுலாவுக்கான சிறப்பு திட்டத்தை உத்தர பிரதேச அரசு வகுத்துள்ளது.
பாலைவனத்துடன் புராதன கோட்டைகள் அதிகம் உள்ள ராஜஸ்தான் மாநிலம், திருமண சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது. இங்குள்ள கோட்டைகளில் திருமண நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கின்றன.
கடந்த ௨௦௨௨ நவ., முதல் இந்தாண்டு மார்ச் வரையில், ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கோட்டைகளில், ௪௦ ஆயிரம் திருமணங்கள் நடந்துள்ளன.ராஜஸ்தானில், திருமண சுற்றுலா வாயிலாக மட்டும் ஆண்டுக்கு, ௨,௫௦௦ கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்த வரிசையில், பல புகழ்பெற்ற கோட்டைகள் உள்ள உத்தர பிரதேசத்திலும் திருமண சுற்றுலாவை ஊக்குவிக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு புதிய திட்டத்தை வகுத்து உள்ளது.
மாநிலத்தின், ௨௦௨௨ம் ஆண்டுக்கான சுற்றுலா கொள்கையில் இதற்கான சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விரைவில் இது அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட உள்ளன.
இதன்படி, காதல் சின்னமான தாஜ்மஹால், ஆன்மிக பூமியான வாரணாசி உள்ளிட்ட இடங்களைத் தவிர, பல பிரபல கோட்டைகள் உள்ள பகுதிகளிலும் சில புதிய வசதிகள் செய்யப்பட உள்ளன.
மாநிலத்தில், ௧௦௦ இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், மிர்ஜாபுரில் உள்ள சுனார் கோட்டை, லக்னோவில் உள்ள சட்டார் மன்ஜில், மதுராவில் உள்ள பர்சானா ஜல் மஹால், ஜான்சியில் உள்ள பருவா சாகர் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
பந்தல்கோட் பகுதியில் உள்ள கோட்டைகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement