புதுடெல்லி,
பிரதமர் மோடி பங்கேற்கும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நிறைவடைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் அரியானாவை சேர்ந்த் சுனில் ஜக்லான் என்பவரின், மகளுடன் செல்பி என்ற பிரசார திட்டத்திற்காக அவரை பிரதமர் மோடி பாராட்டி பேசியுள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி பேசும்போது, பெண் குழந்தைகளை காப்போம், அவர்களை கல்வி கற்க செய்வோம் என்ற பிரசாரத்தினை அரியானாவில் இருந்து நான் தொடங்கி வைத்தேன்.
ஆனால், மகளுடன் செல்பி என்ற இந்த பிரசார திட்டம் என்னை வெகுவாக பாதித்தது. எனது மன் கி பாத் நிகழ்ச்சியில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டு உள்ளேன்.
இந்த மகளுடன் செல்பி என்ற பிரசார திட்டம் விரைவில் சர்வதேச பிரசாரம் ஆகி விட்டது. அவரது இந்த பிரசாரத்தினால், ஒருவருடைய வாழ்வில் மகள் இருப்பதற்கான முக்கியத்துவம் முன்னே கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும் என பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
சுனில் ஜக்லான் ஜி ஒரு தாக்கம் ஏற்படுத்தி உள்ளார். இதனால், பெண் குழந்தைகளை காப்போம், அவர்களை கல்வி கற்க செய்வோம் என்ற பிரசார திட்டமும் வெற்றி பெற அத்திட்டம் உதவியுள்ளது.
நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அது செல்பியை பற்றியோ, தொழில் நுட்பம் பற்றியோ அல்ல. மகளின் முக்கியத்துவம் பற்றியது. பெண் குழந்தைகளை காப்போம், கல்வி தருவோம் மற்றும் மகளுடன் செல்பி போன்ற பிரசாரங்களின் முடிவானது, அரியானாவில் பாலின விகிதம் மேம்பட உதவியுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.