பீதர்: கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பீதர் நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக ஆட்சியில் கர்நாடக மாநிலம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு இங்கு ஆட்சி செய்த, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் மக்களை ஏமாற்றின. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அந்தக் கட்சிகள் நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை பாஜக நிறைவேற்றி வருகிறது.
காங்கிரஸ் முற்றிலும் எதிர்மறை எண்ணம் நிறைந்த கட்சியாக உள்ளது. கர்நாடகாவின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைந்தால்தான் நாடு முன்னேற்றம் அடைய முடியும். கர்நாடகாவை நம்பர் 1 மாநிலமாக மாற்ற இரட்டை இன்ஜின் அரசாங்கம் மிகவும் முக்கியம். பாஜக ஆட்சியை மீண்டும் ஏற்க கர்நாடக மக்கள் தயாராக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கர்நாடக விவசாயிகள், மக்களுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மாநில விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. முடிக்கப்படாமல் இருந்த பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை பாஜக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்.
நாட்டை காங்கிரஸ் பிளவு படுத்தியுள்ளது. அந்த கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் என்னை மீண்டும் அவமரியாதை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை என்னை 91 முறை வெவ்வேறு வழிகளில் அவமரியாதை செய்துள்ளது.
அவர்கள் என்னை தவறாக பயன்படுத்தட்டும். நான் கர்நாடக மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவேன். சட்டமேதை அம்பேத்கரை கூட காங்கிரஸ் அவமரியாதை செய்கிறது. வீர சாவர்க்கரை அவமரியாதை செய்வதை நாம் பார்க்கிறோம். சாமானியர்களை பற்றி பேசுபவர்களையும் ஊழலுக்கு எதிராக பேசுபவர்களையும் காங்கிரஸ் வெறுக்கிறது. காங்கிரஸின் முறைகேடுகளுக்கு வாக்குகள் மூலம் பதிலளிக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 அளிக்கப்படும் திட்டம் (கிசான் சம்மான் நிதி) தொடங்கப்பட்டபோது கர்நாடாவில் காங்கிரஸ்-மஜத ஆட்சி நடைபெற்று வந்தது.அந்தத் திட்டத்தின் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியலை அனுப்புவதில் ஏகப்பட்ட இடையூறுகளை காங்கிரஸ்-மஜத அரசு செய்தது. இதன் மூலம் விவசாயிகள் மூலம் காங்கிரஸ்-மஜத அரசு எவ்வளவு வெறுப்புணர்வை கொண்டிருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே பணம் சென்று விடுவதால் காங்கிரஸ்-மஜத அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தரும் ரூ.6,000, மாநில அரசு தரும் ரூ.4,000 என மொத்தம் ரூ.10,000 ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு கர்நாடகாவில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிதிதருவதாக காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது. ஆனால் சொன்னபடி செய்யவில்லை. மேலும் விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. மக்களை ஏமாற்றுவதைத் தவிர காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. இதன்மூலம் காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.