மதுரை: சித்திரை திருவிழா பாதுகாப்புப் பணியில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக கூடுதல் டிஜிபி சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக கூடுதல் டிஜிபி சங்கர் சனிக்கிழமை மதுரை வந்தார். சித்திரை திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடக்குமிடம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். மாநகர காவல் ஆணையர் நரேந்திரன், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், டிஐஜி பொன்னி, துணை ஆணையர்கள் சாய் பிரனீத், அரவிந்த் , காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
இந்நிலையில், மதுரை பாண்டிக்கோயில் அருகே தனியார் மண்டபத்தில் இன்று நடந்த விருதுநகர், மதுரை மாவட்டபொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூடுதல் டிஜிபி பங்கேற்றார். இதில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து 246 மனுக்கள் பெறப்பட்டன. 170 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. எஞ்சிய மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கூடுதல் டிஜிபி அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “முதல்வரின் உத்தரவின்பேரில், இதுபோன்ற சிறப்பு முகாம் மூலம் புகார் கொடுக்கும் நபர்களின் மனுக்கள் மீது விசாரணை செய்யப்படுகிறது. இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து தீர்வு காணப்படுகிறது. புகார்களை விசாரிக்கும் முறை பாரபட்சமின்றி சிறப்பாக இருக்கவேண்டும், பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே காவல்துறையால் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது
இந்தாண்டு மதுரை சித்திரைத் திருவிழாவுக்கென 10 எஸ்பிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன” என்றார்.
இக்கூட்டத்தில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன், துணை ஆணையர்கள் சாய் பிரனீத், அரவிந்த், மங்களேசுவரன், ஆறுமுகசாமி, விருதுநகர் எஸ்பி சீனிவாச பெருமாள் மற்றும் மதுரை , விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.