வாஷிங்டன்: இந்திய அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா ஜே சாரியை விமானப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது கர்னலாக இருப்பவர் ராஜா ஜே சாரி. வயது 45, விண்வெளி வீரர். இந்த இளம் வயதில், இவரை அமெரிக்க விமானப் படையில் மிக முக்கியமான பிரிகேடியர் ஜெனரல் பதவியில் நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இதற்கான பரிந்துரையை அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சிவில் மற்றும் ராணுவ உயர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி, அதிபர் பைடன் பரிந்துரைத்துள்ள ராஜா ஜே சாரி நியமனத்துக்கும் செனட் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜா ஜே சாரி தற்போது டெக்சாஸில் உள்ள ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ‘க்ரூ-3’ பிரிவில் கமாண்டராகவும், விண்வெளி வீரராகவும் இருக்கிறார். மாசாசூசெட்ஸில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஏரோநாட்டிக்ஸ் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றுள் ளார். மேரிலேண்டில் உள்ள அமெரிக்க கப்பற்படை சோதனை விமானி மையத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
இவரது தந்தை னிவாஸ் சாரி ஹைதராபாத்தை சேர்ந்தவர். தனது இளம் வயதில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா வந்தார். பின்னர் நன்கு படித்து வாட்டர்லூ பகுதியில் கடைசி காலம் வரை வாழ்ந்தார். அவரது தூண்டுதலால் ராஜா ஜே சாரி ஏரோநாட்டிக்ஸ் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட தொடங்கினார். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்துக்கான ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-3 மிஷனுக்கு ராஜா ஜே சாரி நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படை தளத்தில் 461-வது ஃப்ளைட் டெஸ்ட் ஸ்குவாட்ரனின் தளபதியாகவும், எஃப்-35 ஒருங்கிணைந்த சோதனை படை இயக்குநராகவும் சாரி பணியாற்றி உள்ளார். தவிர விமானங்களை சோதனை அடிப்படையில் இயக்கி, அவற்றின் செயல் திறனை அறியும் டெஸ்ட் பைலட்டாகவும் செயல்பட்டுள்ளார். மேலும், இளம் வயதிலேயே 2,500 மணி நேரங்களுக்கு மேல் விமானங்களை இயக்கி உள்ளார். தற்போது 45 வயதில் அமெரிக்க விமானப் படையின் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி விமானப் படையில் ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்டது. இது கர்னல் பதவிக்கு ஒருபடி உயர்வானது.