சென்னை: Ajith (அஜித்) நடிகர் அஜித் குறித்து இயக்குநர் V.Z.துரை பேசியிருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சினிமாவில் யாரின் துணையுமின்றி நுழைந்து இன்று தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அஜித்குமார். அவரது கேரியர் ஆரம்பத்தில் அஜித்திற்கு துணையாக நின்றவர்களில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி முக்கியமானவர். அஜித்தின் ராசி, வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், ரெட், முகவரி, ஆஞ்ச்நேயா, ஜீ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சக்கரவர்த்தி. இரண்டு பேரும் நெருங்கி பழகியவர்கள்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மரணம்: காலம் செல்ல செல்ல நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் விலங்கு வெப் சீரிஸில் சிறிய வேடம் ஒன்றில் நடித்திருந்தார். சூழல் இப்படி இருக்க புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளர் இறந்துவிட்டார் என பலரும் கூறிவருகின்றனர்.
ரொம்ப நல்ல மனிதர்: இந்நிலையில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி குறித்தும், அஜித் குறித்தும் முகவரி படத்தின் இயக்குநர் V.Z.துரை தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ரொம்ப நல்ல மனிதர். அப்போது யாரிடமாவது உதவி இயக்குநராக இருந்தால்தான் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு முதல் படம் கொடுப்பார்கள்.
ஆனால், முதுகலை படித்துக்கொண்டிருந்த என்னை நம்பி முதல் படமான முகவரி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். எனக்கு அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல குருவும்தான். முதல் நாள் படப்பிடிப்புக்கு முன்னால் இருந்து எடிட்டிங் வரை அனைத்திலுமே அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
அவங்க நட்பு அழகானது: அதேபோல் அஜித்துக்கும், சக்கரவர்த்திக்கும் இடையேயான நட்பு ரொம்ப அழகானது. ஒருவருக்கொருவர் அவ்வளவு புரிதல்களுடன் இருப்பார்கள். சக்கரவர்த்தி சொல்ற விஷயத்தை அஜித் அப்படியே கேட்பார். சாதாரண ஹீரோவாக இருந்த அஜித்தை ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோவாக மாற்றிக்கட்டியவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மட்டும்தான்.
இருவரும் சேர்ந்து வென்றார்கள்: அதைப்போல சக்கரவர்த்தி கேட்ட தேதிகளில் எல்லாம் அஜித் சாரும் வந்து நடித்துக் கொடுப்பார். இவரால் அவரும் அவரால் இவரும் சேர்ந்து ஜெயித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சக்கரவர்த்தி சார் ஒரு கட்டத்தில் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியது தமிழ் திரைக்கு பெரிய இழப்பு.
படத்தோடு மட்டும் நின்றுகொள்ளாமல் அவருடைய வீட்டு விசேஷங்களுக்கும் என்னை அழைப்பார்.. அடிக்கடி அவர் என்னுடன் பேசுவார். என்னை பொறுத்தவரை ஒரு தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் ஒரு குருவையும் இழந்துவிட்டேன்” என உருக்கமாக பேசியிருக்கிறார். V.Z.துரையின் முதல் படம் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விக்ரமை வைத்து அவர் இயக்கிய காதல் சடுகுடு படத்தையும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியே தயாரித்திருந்தார்.