சென்னை: 52வது பிறந்தநாளை நடிகர் அஜித் இன்று கொண்டாடி வருகிறார். அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நேற்று முதலே சிடிபி, மாஷ் அப் என சோஷியல் மீடியாவையே திணறடித்து வருகின்றனர்.
ப்ளூ டிக் பிரபலங்கள் கணக்கில்லாமல் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1990ல் வெளியான என் வீடு என் கணவர் படத்தில் ஸ்கூல் பாயாக சினிமாவில் சின்ன ரோலில் அறிமுகமான அஜித் தன்னைத் தானே செதுக்கி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க!
அஜித்தின் 52வது பிறந்தநாள்: 1971ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்த நடிகர் அஜித் குமார் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1993ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் அஜித் சினிமாவில் 30 ஆண்டுகள் பாக்ஸ் ஆபிஸ் சிங்கமாக கர்ஜித்து வருகிறார்.
தல என பல ஆண்டுகளாக ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த நிலையில், அந்த டைட்டில் கூட வேண்டாம் அஜித் அல்லது ஏகே என்றே அழையுங்கள் போதும் என சொல்லி புகழ்ச்சி பிடிக்காத ஆளாக மாறியவர் நடிகர் அஜித்.

61 படங்கள்: அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, வாலி, அமர்க்களம், முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், தீனா, சிட்டிசன், வில்லன், அட்டகாசம், திருப்பதி, வரலாறு, கிரீடம், பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என 30 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ஏகப்பட்ட சூப்பர் ஹிட்களை கொடுத்து 61 படங்களில் நடித்துள்ள அஜித் குமார் அடுத்ததாக 62வது படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.

100 கோடிக்கு எகிறிய சம்பளம்: துணிவு படம் வரை நடிகர் அஜித் 85 கோடி தான் சம்பளமாக வாங்கி வந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முதன் முறையாக லைகா தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்துக்குத் தான் வாங்க உள்ளார் என்கின்றனர்.
துணிவு படத்திற்கே அஜித் 100 கோடி சம்பளம் வாங்கி விட்டார் என்றும் ஏகே62 படத்துக்கு அவரது சம்பளம் 105 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் கூறுபவர்களும் சினிமா வட்டாரத்தில் உள்ளனர்.
கார் கலெக்ஷன்: லம்போர்கினி, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 740 லீ போன்ற சொகுசு கார்கள் உள்ளன.இதேபோல் அப்ரிலியா கபோனார்ட் பைக், பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் பைக் மற்றும் பிஎம்டபிள்யூ கே1300 எஸ் பைக் போன்ற காஸ்ட்லி பைக்குகளையும் வைத்துள்ளார் நடிகர் அஜித்.

சொத்து மதிப்பு: நடிகை ஷாலினியை 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட அஜித்துக்கு அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் எனும் மகனும் உள்ளனர். திருவான்மியூரில் ஒரு வீடும் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பிரம்மாண்ட வீடும் நடிகர் அஜித்துக்கு உள்ளது என்கின்றனர்.
நடிகர் அஜித்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 380 கோடி முதல் 400 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவை தாண்டி புகைப்படக் கலைஞர், பைக் மற்றும் கார் ரேஸர், துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை வென்றுள்ளார், டிரோன், விமானம் ஓட்டுதல், உலகின் பல்வேறு பகுதியில் பைக் டூர் செல்வது என சகலகலா வல்லவனாக திகழும் நடிகர் அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!