சென்னை: விஜய்யின் லியோ ஷூட்டிங் கடந்த 60 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மே முதல் வாரத்தில் லியோ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த ஷெட்யூலில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மூவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம்.
இந்நிலையில், விக்ரம் பட வில்லனும் லியோவில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோவில் இணையும் விக்ரம் பட வில்லன்: தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ மிகப் பெரிய மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து வருகின்றனர்.
முக்கியமாக கைதி படத்தில் போலீஸாக நடித்த ஜார்ஜ் மரியான், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டினாவாக மாஸ் காட்டிய டான்ஸர் வசந்தி ஆகியோரும் கமிட் ஆகியுள்ளனர். இவர்களுடன் விக்ரம் படத்தில் கால் கேர்ளாக நடித்திருந்த மாயா கிருஷ்ணனும் சமீபத்தில் இணைந்தார். இதனால், லியோ திரைப்படம் லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகி வருவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக டான்ஸர் ஜாஃபர் சாதிக்கும் லியோவில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. லியோவுக்கு முன்பு லோகேஷ் இயக்கியிருந்த விக்ரம் படத்தில், விஜய் சேதுபதி கேங்கில் ஒருவராக நடித்திருந்தார் ஜாஃபர். இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் லியோ படத்திலும் விஜய்யுடன் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏஜெண்ட் டினா, மாயா கிருஷ்ணன், ஜாஃபர் சாதிக் இந்த மூன்று கேரக்டர்களுமே விக்ரம் திரைப்படத்தில் உயிரிழந்துவிடுவார்கள். அதனால் லியோ திரைப்படம் விக்ரமின் ப்ரீக்வெல்லாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் விஜய்யின் தளபதி 68 அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாம். இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.