சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 28ம் தேதி வெளியானது.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகியிருந்தது.
அதிக எதிர்பார்ப்புடன் வெளியான பொன்னியின் செல்வன் 2, முதல் பாகத்தை விடவும் வசூலில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது.
முதல் இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு கிடைத்த பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்து பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் 2 இரண்டாம் நாள் வசூல்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது. லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், முதல் நாளில் 80 கோடியும், இரண்டாம் நாளில் 70 கோடியும் வசூலித்து மாஸ் காட்டியது.
இந்நிலையில், முதல் பாகத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 கடந்த 28ம் தேதி ரிலீஸானது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் ஒரேகட்டமாக முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதனால், முதல் பாகம் வெளியான 7 மாதத்தில் இரண்டாம் பாகமும் தற்போது வெளியாகியுள்ளது. குறைந்த இடைவெளியில் வெளியானபோதும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால், பொன்னியின் செல்வன் 2 வசூல் முதல் பாகத்தை விடவும் குறைவாக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பொன்னியின் செல்வன் 2 முதல் நாளில் 60 முதல் 65 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் 26 கோடி வரையும், இந்தியா முழுவதும் 35 கோடி வரையும், மற்ற நாடுகளில் 25 முதல் 30 கோடி ரூபாய் வரையும் கலெக்ஷன் செய்துள்ளதாம்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் வசூல் இன்னும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் மொத்தமே 45 கோடி ரூபாய் தான் கலெக்ஷன் கிடைத்துள்ளதாம். அதன்படி தமிழ்நாட்டில் 20 கோடியும், இந்தியாவில் 25 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் 2 ஒட்டுமொத்தமாக முதல் இரண்டு நாட்களில் 109 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2 வசூல் முதல் இரண்டு நாட்களில் 100 கோடியை கடந்த போதும், முதல் பாகத்தை ஒப்பிட்டளவில் ரொம்பவே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்துள்ளன. வாரிசு திரைப்படம் இரண்டாவது நாளில் 35 கோடியும், துணிவு 32 கோடி ரூபாய் வரையும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு நாட்கள் ரிப்போர்ட் அடிப்படையில் பொன்னியின் செல்வன் 2 மொத்தமாக 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் வசூலில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லாமே தலை கீழாக போய்விட்டது. இதனால் பொன்னியின் செல்வன் படக்குழு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியான நிலையில், ரசிகர்களின் கவனம் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் மீது திரும்பியுள்ளது.