சென்னை : நடிகை சமந்தா அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் இல்லை.
தெலுங்கில் யசோதா, சாகுந்தலம் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார் சமந்தா. இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகின.
தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
சமந்தா வெளியிட்ட ஆக்ஷன் புகைப்படங்கள் : நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்ததன்மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். இவரது விவாகரத்து முடிவு மற்றும் மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு போன்றவை இவரது கேரியரில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.
தமிழில் இவருக்கு நேரடி படங்கள் இல்லாத நிலையில், தெலுங்கில் உருவான யசோதா, சாகுந்தலம் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இதில் யசோதா படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பும் வசூலும் காணப்பட்ட நிலையில், சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சொதப்பியுள்ளது. இதனால் சமந்தாவின் மார்க்கெட் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சிட்டாடல் வெப் தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படங்களில் மட்டுமில்லாமல் விளம்பரப் படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. அதிகமான விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் குளிர்பான விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திருந்தார். அதில் பறந்து பறந்து சண்டையெல்லாம் போட்டார்.
இந்நிலையில் தற்போது அந்த விளம்பரத்தின் மேக்கிங் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மேலிருந்து கயிறு கட்டி எப்படி அவர் பறந்து பறந்து அடிக்கிறார் என்பதாக காணப்படுகிறது. இன்னும் முழுமையாக மயோசிட்டிஸ் நோய் பாதிப்பிலிருந்து சமந்தா தேறவில்லை. சமீபத்தில் ஆக்ஸிஜன் சிகிச்சை எடுத்துக் கொண்டதன் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இதுபோன்ற ரிஸ்க்கான விஷயங்களையும் அவர் மேற்கொண்டு வருவது ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி வருகிறது. சமீபத்தில் இந்த உடல்நலக் குறைவுடனேயே சாகுந்தலம் படத்தின் பிரமோஷன்களிலும் அவர் அதிகளவில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது விளம்பரப் படங்களிலும் இதுபோன்ற ரிஸ்க்கான விஷயங்களை கையிலெடுப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. சமந்தா என்றாலே அனைவருக்கும் உத்வேகமானவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.