கரூர்: அண்ணாமலை எந்தக் காலத்திலும் நேர்மையான அரசியல் செய்யமாட்டார் என இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை பாஜகவில் இருக்கிறார் என்பதற்காக தாம் இப்படி கூறவில்லை என்றும் அவர் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியில் இருந்திருந்தாலும் அவரது செயல்பாடுகளை வைத்து தாம் இப்படித்தான் கூறியிருப்பேன் எனவும் விளக்கம் அளித்தார்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
அண்ணாமலை காவல்துறையில் பணியாற்றியிருப்பதால் நிறைய கிரிமினல்களை அவர் பார்த்திருக்கக் கூடும் என்றும் அதனால் அவருக்கு கிரிமினல் மூளை எனவும் விமர்சித்தார்.
ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்று கூறிவிட்டு சொத்துப் பட்டியலை வெளியிட்டவர் அண்ணாமலை என்றும் அவர் தன்னை பெருமைமிகு கன்னடர் எனப் பேசியதையும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் மீதோ தமிழ்தாய் வாழ்த்து மீதோ அக்கறை கிடையாது எனவும் இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலையை பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தோரும் இதுவரை விமர்சித்து வந்த நிலையில் திரைத்துறை சார்ந்த இயக்குநர் அமீர் போன்றவர்களும் இப்போது விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் எனக் கூறிக்கொண்டிருக்கிறார் ஆனால் தமிழக மக்கள் மீது அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் கிடையாது என்றும் அவர் விமர்சித்தார்.