லண்டன்-பிரிட்டனில் உள்ள அரசு மாளிகையை பயன் படுத்தியதற்காகவும், அங்கு காணாமல் போன பொருட்களுக்காகவும் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் பதவி வகித்தார்.
கடந்த ஆண்டு செப்., 6 முதல் அக்., 25 வரை, 44 நாட்கள் மட்டுமே அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அவருக்கு பின், அதே கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றார்.
லிஸ் டிரஸ் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு முன் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அந்த பதவியில் இருப்பவர்கள் லண்டன் அருகே உள்ள சீவெனிங் எஸ்டேட் என்ற சொகுசு மாளிகையை பயன்படுத்த தகுதி பெறுவர்.
அந்த வகையில், அலுவல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல சந்திப்புகளை சீவெனிங் எஸ்டேட்டில் லிஸ் டிரஸ் நடத்தி உள்ளார். தனிப்பட்ட முறையில் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளுக்கு அவர் அங்கு ஏற்பாடு செய்துள்ளார். அரசு அலுவல் ரீதியிலான கூட்டங்களுக்கு ஆகும் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.
தனிப்பட்ட கூட்டங்களுக்கு ஆகும் செலவுகளை வெளியுறவுத்துறை அமைச்சரோ அல்லது அவரது கட்சியோ தனிப்பட்ட முறையில் அரசுக்கு செலுத்த வேண்டும்.
இந்நிலையில், லிஸ் டிரஸ் நடத்திய பல்வேறு கூட்டங்கள் மற்றும் விருந்துகளுக்காக பணம் செலுத்தவில்லை என, அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாளிகையில் இருந்த குளியல் ஆடைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அதற்கும் லிஸ் டிரஸ் பணம் செலுத்த வேண்டும் என, பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த வகையில், 18 லட்சம் ரூபாய்க்கான, ‘பில்’ டிஸ் டிரஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
”தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கான கட்டணங்களை லிஸ் டிரஸ் செலுத்திவிட்டார். இப்போது அனுப்பப்பட்டுள்ள பில்லில், அலுவல் ரீதியிலான கூட்டங்களுக்கும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது,” என, லிஸ் டிரசின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்