சென்னையில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் அங்குள்ள நல்லூர் அருவியில் குளித்த போது தவறி விழுந்து மென்பொறியாளரும் அவரது மகளும் பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது. ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை அறிவிப்பை மீறி குளிக்க சென்றதால் நிகழ்ந்த விபரீதம்..!
ஏற்காட்டில் யூடியூப்பர்களால் பிரபலமாக்கப்பட்ட அருவி என்று சொல்லப்படும் நல்லூர் அருவியில் தான் தந்தை மகள் என இருவர் வழுக்கி விழுந்து பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது
சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. 43 வயதான இவர் மென் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சந்தன லட்சுமி . இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்
மூத்தமகள் சவுமியா சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பாலமுரளி தனது மனைவி மகள்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்காட்டிக்கு சுற்றுலா சென்றார்.
ஏற்காட்டிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர். திங்கட்கிழமை மதியம் ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி வழுக்கு பாறைகள் நிறைந்து காணப்படுவதால அங்கு குளிப்பது ஆபத்தானது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாலமுரளி தனது மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக மூத்தமகள் சவுமியாவுடன் சென்று நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளார்.
வழுக்குபாறை நிறைந்த அந்த நீர்வீச்சியில் சிறிது நேரம் மகிழ்ச்சியாக குளித்த நிலையில் இருவரும் வெளியில் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி சௌமியா பாறையில் வழுக்கி விழுந்துள்ளார்.
அவர் கீழே விழுந்து விடாமல் இருக்க பாலமுரளி பாய்ந்து பிடித்துள்ளார் . ஆனால் அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே, விழுந்த வேகத்தில் இருவரும் கீழுள்ள பாறைகளில் அடுத்தடுத்து மோதி தண்ணீரில் விழுந்து தடாகத்தில் மூழ்கியதால் பரிதாபமாக பலியானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் , உள்ளூர் வாசிகள் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களின் சடலத்தை மீட்டு 108 ஆம்புளன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.. ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இருவர் பலியான நிலையில் நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்காக குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் அருவி மற்றும் நீர் நிலைகளை கூகுள் மேப்பில் தேடிச்செல்லும் பெற்றோர்களே, அந்த அருவி மற்றும் தடாகத்தின் தன்மை தெரியாமல் குளிக்கும் ஆர்வத்தில் சென்று அபாயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.