ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கை

பெங்களூரு ,

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

பா.ஜ.க. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தொடர்ச்சியாகப் பல மாநில சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி கண்டிருந்தாலும் அண்மையில் இமாசல் பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. அந்த உற்சாகத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. இந்த சூழலில் கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம், தினமும் அரை லிட்டர் இலவச பால் விநியோகம் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள்.

பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுக்கு வழங்கப்படும். பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், சட்டவிரோத குடியேறிகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.