இந்த பொழப்புக்கு களவெடுக்க போலாமே கேட்டான் பாரு கேள்வி..! பரிசல் ஓட்டிகளின் பகல் கொள்ளை

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் சவாரி செய்வதற்கு அரசின் சுற்றுலாத்துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பரிசல் ஓட்டிகள் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்கள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாபயணிகளின் பாக்கட்டில் இருக்கும் துட்டுக்கு வேட்டு வைக்கும் பரிசல் ஓட்டிகளின் பகல் கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து, இங்குள்ள அருவிகளில் குளித்து, மீன் சமையல் சாப்பிட்டு மகிழ்ந்தாலும், பரிசல் சவாரி செய்வதற்காக ஒகேனக்கல்லை தேடி வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர்..

பரிசலில் 4 பேர் பயணம் செய்யவோ அல்லது  ஒரே ஒரு நபர் மட்டும் சவாரி செய்தாலோ 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் , பரிசலுக்கு 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஆளுக்கு தகுந்தார் போல கூடுதல் கட்டணத்தை கறாராக பேரம் பேசி பரிசல் ஓட்டிகள் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்..

இவர்களின் பகிரங்க கட்டண கொள்ளையை பார்த்து சிலர் கேள்வி எழுப்பியபோது, கடந்த 6 மாதமாக தாங்கள் வருமானமில்லாமல் இருந்ததாகவும் , விடுமுறை நாளில் இப்படி வாங்கினால் தான் தாங்களும் வாழமுடியும் என்று பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர்..

பரிசல் ஓட்டிகளின் இந்த கூடுதல் கட்டண வசூலை கேட்ட, ஏழை எளிய மக்கள் பரிசலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது…

இதையடுத்து, பணம் கொடுக்க இயலாமல் கரையில் ஏக்கத்துடன் நின்ற சிலர் , பரிசல் ஓட்டிகளை பார்த்து, இப்படி பகல் கொள்ளையடிப்பதற்கு பதில் எங்காவது களவெடுக்க போகலாமே? என்று காட்டமாக கேட்டனர்..

பரிசலில் செல்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கோடை விடுமுறை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொண்டு அநியாய கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடும் பாதுகாப்பான பரிசல் பயணம் மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.