
ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து நடிக்க விடுங்கள் ; ரசிகர் கேள்விக்கு அபிஷேக் பச்சன் பதில்
உலக அழகி பட்டம் பெற்ற பின்னர், ஒரு நடிகையாக தனது பாதையை தேர்ந்தெடுத்த ஐஸ்வர்யா ராய் இப்போது வரை முன்னணி நடிகையாகவே தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியாக அமிதாப்பச்சன் குடும்பத்து மருமகளாக ஆன பிறகும் கூட தனது நடிப்பு பயணத்தை நிறுத்தாமல் அதே சமயம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது நடிப்பில் அவரை முன்னிலைப்படுத்தி உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி அவருக்கு இன்னும் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று தந்து வருகிறது.
இந்த நிலையில் அவரது கணவர் நடிகர் அபிஷேக் பச்சன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர், “ஐஸ்வர்யா ராய் நன்றாக நடித்து வருகிறார்.. அவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க விடுங்கள்.. மகள் ஆரத்யாவை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று ஆலோசனை கூறினார். ஆனால் இதை கோபமாக எடுத்துக் கொள்ளாமல் சாந்தமாக பதில் கூறியுள்ள அபிஷேக் பச்சன், 'நான் அவரை ஒப்பந்தம் செய்ய அனுமதிப்பதா ? சில விஷயங்களை செய்வதற்கு அவர் என்னிடம் அனுமதி கேட்க தேவையே இல்லை.. குறிப்பாக அவருக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு..” என்று கூறியுள்ளார்.