தமிழ்நாட்டை சேர்ந்த இன்ஃபோசிஸின் முன்னாள் பொறியாளர் வெங்கடசாமி விக்னேஷ், தனது வேலையை விட்டுவிட்டு, ஜப்பானில் விவசாயியாகி, முந்தைய சம்பளத்தைவிட இரண்டு மடங்கு பெறுகிறார்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவர் விக்னேஷ். கோவிட் லாக்டவுன் நேரத்தில் பெற்றோருக்கு உதவும் பொருட்டு, விவசாயத்தில் அதிக ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திவந்தார்.
வயதானவர்களை அதிகம் கொண்ட ஜப்பானில், அங்குள்ள மக்களிடையே விவசாயத்தில் ஆர்வம் இல்லை என்பதையும், அங்கு விவசாயிகளுக்கு அதிக தேவை உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டார். ஜப்பானிற்கு குடிபெயர வேண்டுமானால், அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என, அவற்றை கற்பிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு கற்ற பின்னர் ஜப்பானுக்கு குடிபெயர்ந்தார்.
நிலையான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஐடி வேலையை உதறிவிட்டு, விவசாயத்திற்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் விக்னேஷ்க்கு, தொடக்கத்தில் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவன குடியிருப்பில் இலவசமாகவும், வரி விலக்குகள் போக ரூ. 80,000 சம்பாதித்து வருகிறார். இதைக் கண்டு அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள கோச்சி மாகாணத்தில், கத்திரிக்காய் பண்ணையில் தற்போது விக்னேஷ் பணிபுரிந்து வருகிறார். பண்ணை வேலையில் பயிர்களைப் பராமரிப்பது, அறுவடை செய்வது, சுத்தம் செய்வது மற்றும் பதப்படுத்துவது போன்றவை அடங்கும். வேலையின் பெரும் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டு உள்ளதால் உடலுழைப்பும் அங்கு மிகக் குறைவு. விக்னேஷ், ஜப்பானில் உள்ள புதுமையான நுட்பத்தை கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.