லக்னோ,
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக 257 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஆனால் அதே போன்று லக்னோ ஆடுகளத்தில் ரன் எடுப்பது சிரமம். இங்கு நடந்த குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 136 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 128 ரன்னில் சரண் அடைந்ததே அதற்கு சான்று.
ஆனாலும் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதால் கூடுதல் உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள். மார்கஸ் ஸ்டோனிஸ், கைல் மேயர்ஸ், கேப்டன் ராகுல் நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆட்டத்தில் விரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் ஸ்டோனிஸ் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை அவர் ஆட முடியாமல் போனால் குயின்டான் டி காக் இடம் பெறலாம்.
பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையில் உள்ளது. பெங்களூரு அணியில் பொறுப்பு கேப்டன் விராட் கோலி (333 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (422 ரன்), கிளைன் மேக்ஸ்வெல் (258 ரன்) ஆகியோர் தான் பேட்டிங்கில் ஆணிவேராகும்.
மற்ற வீரர்கள் யாரும் மூன்று இலக்கத்தை கூட தொடவில்லை. எனவே இந்த மூவரின் மட்டையடியை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் அமையும். ஏற்கனவே சொந்த ஊரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு 212 ரன் குவித்த போதிலும் அந்த இலக்கை லக்னோ அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த தோல்விக்கு அவர்களது இடத்தில் பழிதீர்க்கும் முனைப்புடன் பெங்களூரு படை ஆயத்தமாகி வருகிறது. காயத்தில் இருந்து மீண்டு விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது.
(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா)