
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கரேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பாதம்மா. இவர் தனது கணவருடன் உலவபாடு செல்வதற்காக தெனாலி ரயில் நிலையத்திற்கு வந்தார். விஜயவாடாவில் இருந்து கூடூர் செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். ரயில் பாபட்லா அடுத்த சீராலா ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது.
அப்போது திருப்பாதம்மா கழிவறைக்கு செல்ல ரயிலில் இருந்து கிழே இறங்கினார். அவர் மீண்டும் வருவதற்குள் ரயில் புறப்பட்டது. இதனைக் கண்ட திருப்பாதம்மா வேகமாக ஓடிவந்து ரயிலில் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தவர் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கினார்.
இதனைக் கண்ட ரயில் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசார் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருப்பாதம்மாவை மீட்டனர்.

படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீராலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓங்கோல் ரீம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே பெண் சிக்கியதால் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.