சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக இன்று வெளியிட்டுள்ளது.
பாஜகவுக்கு சற்றும் சளைக்காமல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமாடி வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ராகுல்.
இப்படியாக காங்கிரஸ், பாஜக இடையேயான வாக்குறுதிகளால் கர்நாடக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

”வருகிற 2023 மே 10 அன்று கருநாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை கருநாடக மாநிலக் கழக அமைப்பு நிர்வாகிகள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.”
”கருநாடக மாநிலக் கழக அமைப்பு சார்பில் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மநீம தலைவர் கமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.