காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட கர்நாடக மாநில திமுகவினருக்கு துரைமுருகன் வேண்டுகோள்

சென்னை: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அம்மாநில திமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில அனைத்து அமைப்புகளுக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வருகிற 2023 மே 10 அன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், கர்நாடக மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.