சிறுவன் மீது பைக் மோதி 20 அடி தூரம் இழுத்துச் சென்ற வாலிபர் – போடியில் பரபரப்பு.!!
தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே டி.வி.கே. நகர் பகுதியைச் சேர்ந்த அபியுல்லா என்ற ஆறு வயது சிறுவன் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதியதில் சிறுவனின் சட்டை வாகனத்தில் இருந்த கம்பியில் சிக்கிக் கொண்டது.
இதனால் சிறுவன் சத்தம் போட்டு கத்தியும் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்தாமல் தரதரவென சிறுவனை இழுத்துச் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தி சிறுவனை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக முட்புதர் அருகே இருந்த குப்பையில் தூக்கி வீசி விட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து புதருக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பதறியடித்து சென்று பார்த்தபோது சிறுவன் அபியுல்லா காயங்களுடன் கிடந்துள்ளார். உடனே மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிறுவனின் பெற்றோர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வாலிபரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.