சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (34). இவர் நண்பர்களுடன் தரமணி எம்.ஜி.ஆர் சாலை, ரயில்வே பாலம் கீழே மது அருந்தினார். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பு, ஞானவேல், அவரின் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஞானவேலை அந்த தரப்பு சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து ஞானவேலின் அண்ணன் முருகன் என்பவர் தரமணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
விசாரணையில் ஞானவேலைக் கொலைசெய்தது பெருங்குடியைச் சேர்ந்த கோபி, கோட்டீஸ்வரன், தர்மராஜ் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். கைதான கோட்டீஸ்வரன் துரைப்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கோபி மீது ஒரு கொலை வழக்கு உள்பட இரண்டு வழக்குகள் இருக்கின்றன. கைதான மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.