சென்னை : ஒரு திரைப்படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாகும். அதுவும், படத்திற்கு வில்லி இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம் படம் ஹிட்டுத்தான்.
ஆண்கள் தான் வில்லனாக நடிக்க முடியுமா, பெண்களும் கலக்குவோம் என்று பல நடிகைகளும் போட்டி போட்டி வில்லியாக மிரட்டி வருகின்றனர்.
அந்த வகையில் வில்லி கதாபாத்திரத்தில் படுபயங்கரமாக நடித்து அலப்பறை கொடுத்த ஐந்து சிறந்த வில்லி நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாமா?
ரம்யா கிருஷ்ணன் : வில்லி கதாபாத்திரம் என்று வந்து விட்டால் அந்த வரிசையில் முதல் இடத்தை பிடித்து விடுவார் ரம்யாகிருஷ்ணன். படையப்பா படத்தில் நீலம்பரியாக இவர் நடித்ததைப் பார்த்து அனைவருமே வாயை பிளந்து பார்த்தார்கள். படையப்பா திரைப்படம் வெளியாகி பல வருடம் ஆனாலும், நீலம்பரியின் கர்ஜனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
வித்தார்த்,அமலாபால் நடித்த மைனா படத்தில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை சூசன் ஜார்ஜ். இப்படத்தில் மூலம் வில்லியாக மக்களை மிரட்டியிருப்பார். இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், இவர் பேசிய ”எப்போ வரீங்க… எப்போ வரீங்க” என்று ஒரே வார்த்தையை பேசி பார்வையாலே மிரட்டி இருப்பார். இப்படத்திற்கு பிறகு சூசனுக்கு நல்ல வெயிட்டான வேடங்களே
கிடைக்கவில்லை.
வரலட்சுமி சரத்குமார் : சண்டைக்கோழி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சண்டைக்கோழி 2 வெளியானது. இதில் ராஜ் கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். பல படங்களில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி, சண்டைக்கோழிப்படத்தில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த பாராட்டையும் தட்டிச்சென்றார். அதைத் தொடர்ந்து சர்கார் படத்திலும் வில்லியாக வந்து பெயர் எடுத்தார்.
ரீமா சென் : மின்னலே படத்தில் அழகு பதுமையாக வலம் வந்த ரீமா சென், சிம்பு, நயன்தாரா நடித்த வல்லவன் படத்தில் அதிரடியான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதுவும் காதலிக்கும் காதலனிடம் என்னை காதலிக்கிறல… காதலிக்கிறல என கேட்டு கேட்டே வில்லத்தனத்தில் பின்னி இருப்பார். இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்திலும், ரீமா சென் வில்லியாக நடித்திருந்தார்.
ஷ்ரேயா ரெட்டி : 2006ம் ஆண்டு விஷால், ரீமா சென், வடிவேலு நடித்த திமிரு படத்தில் நடிகை ஷ்ரேயா ரெட்டி ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். பெண்ணுக்கு உரிய நளினம் இல்லாமல் அடாவடியாக வரும் இவரை கண்டு பயப்படாதவர்களே இருக்க முடியாது. இப்படி ஒரு நடிப்பா, இவரும் ஒரு பெண்ணா என கேட்கும் அளவிற்கு வில்லித்தனத்தில் மிரட்டி இருப்பார் ஷ்ரேயா ரெட்டி.