டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. ஆனால் அதன்பிறகு 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை.
எனவே டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பஜ்ரங் புனியா, விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். சானியா மிர்சா, நீரஜ் சோப்ரா, இர்பான் பதான், அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த வீரர்கள் போராடம் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை பார்த்து நெஞ்சம் பதைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
newstm.in