திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் இமானுவேல் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், விடுமுறை தினத்தை முன்னிட்டு, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் இருவர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இருவரில் சுப்பராயலு என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், உடன் வந்த கோவிந்தன் என்பவரும் உள்ளே இறங்கியுள்ளார்.
அவரும் பேச்சு மூச்சில்லாமல் போகவே, கழிவுநீரை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் ஓட்டுநர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இருவரது சடலங்களும் வெளியே எடுக்கப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் தொட்டியில் அவர்களை இறங்க அனுமதித்த பள்ளியின் தாளாளர் சைமன் டி விக்டர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.