விழுப்புரம்: திமுக அரசு அனைத்து பணிகளுக்கும் 28 சதவீதம் கமிஷன் வாங்குகிறது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரான சிவி சண்முகம் எம்,பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது, ”திமுக ஆட்சி அமைந்த இந்த 2 ஆண்டுக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக ஆளுரிடம் புகார் அளித்துள்ளோம்; மத்திய அரசிடமும் கூறியுள்ளோம். அதற்கேற்றார் போல விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய சம்பவம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை நடைபெற்றுவருகிறது. தற்போது கூட்டுபாலியல் வன்முறை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 26, 27ம் தேதிகளில் விழுப்புரம், ஜானகிபுரத்தில் உள்ள 4ம் வகுப்பு படிக்கும் சிறுமி 4 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் தமிழக முதல்வர் விழுப்புரத்தில் உள்ளார். முதல்வர் இருக்கும் இடத்தில் குற்ற செயல் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காதா? இந்த விவகாரம் வெளியே வரும்போதுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்து 4 சிறுவர்களை கைது செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு செய்யும்போதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் பாதி குற்றச் சம்பவங்கள்தான் வழக்காக பதிவு செய்யப்படுகிறது.
இந்த அரசு செய்த சாதனை என்னவெனில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள ஆடியோவில் ”கருணாநிதியைவிட இவர்கள் மிஞ்சி விட்டார்கள். சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார்கள். அந்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று தவித்துவருகிறார்கள்” என்று சொல்லியுள்ளார். யாரோ ஒருவர் கூறவில்லை. நிதிசார்ந்த விவகாரங்களை கவனிக்கும் நிதியமைச்சர் சொல்லியுள்ளார். மற்றதெற்கெல்லாம் பேசும் முதல்வர் இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை. அல்லது அரசை விமர்சிக்கும், செயல்பாடுகளை சுட்டிக்காட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அரசு, இந்த ஆடியோவை வெளியிட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அப்படியெனில் அதில் உண்மை உள்ளது என்று அர்த்தமா? இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை. திமுக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மூலதன செலவாக ரூ 36 ஆயிரம் கோடி ஒதுக்கியது. ஆனால் இவர்கள் கொள்ளையடித்தது ரூ 30 ஆயிரம் கோடி. தவறான செய்தி வெளிட்டால் புகார் கொடுத்து வழக்கு தொடுத்து இருக்கவேண்டும். 2.70 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரூ 30 ஆயிரம் கோடி ரூபாய். கிட்டதட்ட 12 சதவீதமாகும். இந்த அரசு அனைத்து பணிகளுக்கும் 28 சதவீதம் கமிஷன் வாங்குகிறது. இந்த விவகாரத்தில் கருணாநிதியை ஸ்டாலின் மிஞ்சியுள்ளார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தலையிடவேண்டும் என்று மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளோம்.
இன்று தொழிலாளர் தினம். தொழிலாளர் உரிமை அமல்படுத்தப்பட்டு 100 ஆண்டுகளாகிறது. இந்த அரசு 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றியுள்ளது. மத்திய அரசே அமல்படுத்தாத சட்டத்தை மாநில அரசு இயற்றுகிறது என்றால் என்ன காரணம்? எதிர்கட்சியாக இருந்தால் தொழிலாளர். ஆளும்கட்சியாக இருந்தால் தொழிலதிபர். ஆட்சிக்கு வந்த பின்பு தொழிலாளர்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியமாட்டார்கள். இந்த அரசு கோமாளி அரசு. துக்ளக் ஆட்சி நடத்திவருகிறார்கள். மக்கள் நலனை சிந்திக்காமல் சட்டம் இயற்றி, எதிர்ப்பால் அதை திரும்ப பெறுகிறார்கள். 12 மணி நேர வேலை சட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை இந்த அரசு பறித்துவிட்டது. தாலிக்கு பதில் இந்த அரசு மதுவை கொடுத்துள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.