திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்து உள்ள அத்திப்பட்டு புது நகரில் வசித்து வருபவர் வேணு. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் சதீஷ் (20), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச் சென்றார்.
அந்த நேரத்தில் அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவில் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார். இதில் அவரின் உடல் வெந்து அலறி துடித்து உள்ளார்.
உடனே அவரை தொழிலாளர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.