சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது.
தி கேரளா ஸ்டோரி படம் வரும் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தி கேரள ஸ்டோரி படத்தின் டிரெய்லர் என்பது மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மத பயங்கரவாதத்தின் மையமாக நிலை நிறுத்தி கொள்ளும் வகையில் சங்க்பரிவார் பிரசாரமாக உள்ளது. போலியான கதைகள், திரைப்படங்கள் மூலம் பிரிவினைவாத அரசியலை அவர்கள் பரப்ப முயற்சிக்கிறார்கள். எந்தவித உண்மையும், ஆதாரமும் இன்றி இதுபோன்ற கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள்.
படத்தின் டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும். இது சங்க்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும். கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்க்பரிவார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத்தின் முன், இது போன்ற பிரசார படங்களும், அதில் சித்தரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மதத்தினரை அந்நியப்படுத்துவதும், கேரளாவில் அரசியல் ஆதாயம் தேடும் சங்க்பரிவார் முயற்சிகளின் பின்னணியாக உள்ளது. விஷ விதைகளை விதைத்து மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.